ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மாவட்டங்களில் முடிவுற்றது. இதில், திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதாவது, 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும் 9,624 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கம், 76,746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது.
இதில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கட்சி சார்பற்று தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.
இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, 315 மையங்களில் நேற்று காலை தொடங்கியது. நேற்று முழுவதும் எண்ணும் பணி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று(ஜன.3) காலை 11 மணி வரை கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், திருச்சி, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் உள்பட 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றுள்ளது.
இந்த முடிவுகளில் திமுக கூட்டணி 234 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளையும், அதிமுக கூட்டணி 213 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளன. பிற கட்சிகள் 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடங்களை பிடித்துள்ளன.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2131 இடங்களிலும், அதிமுக கூட்டணி 1946 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் 471 இடங்களில் வென்றுள்ளனர். பிற்பகலில் மீதியுள்ள 6 மாவட்டங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு, மாலைக்குள் முழு முடிவுகள் தெரிய வரலாம்.