ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை திமுக கூட்டணியும், 12 மாவட்ட ஊராட்சிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. தற்போது, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் இங்கும் தேர்தல் நடக்கவில்லை.
இதில், 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும், 5090 ஊராட்சி ஒன்றிய வார்டுக கவுன்சிலர் பதவிகளுக்கும் அரசியல் கட்சி சார்பில் போட்டி நடந்தது.
இந்த வகையில் தேர்தல் நடைபெற்ற 26 மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி கவுன்சில்களை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது.
மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதிகமான மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளை திமுக கூட்டணி வென்றுள்ளது. எனவே, இந்த 14 மாவட்டங்களிலும் திமுகவைச் சேர்ந்தவர்களை மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மீதியுள்ள 12 மாவட்டங்களில் அதிமுக கூட்டணி அதிக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை பெற்றிருக்கிறது. எனவே, அந்த 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.