எங்களை மிரட்ட முடியாது.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.. சட்டசபையில் கடும் மோதல்

Cant intimidate us .. Edappadi Palanisamy agitation .. Heavy clash in assembly

by எஸ். எம். கணபதி, Jan 9, 2020, 10:03 AM IST

எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது :


ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை அடிப்படையில் அமைய வேண்டும். இந்த ஆளுநர் உரையில் அரசின் கொள்கை, கோட்பாடுகள் சொல்லப்படவில்லை. அரசின் செய்தி குறிப்பு போல் உள்ளது. பலவற்றை வரிசைப்படுத்தி ரயில்வே கையேடு போல இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் பற்றி அரசின் நிலைப்பாடு என்னவென்று சொல்லப்படவில்லை.


நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்த காரணத்தால்தான், நாடு முழுவதும் இன்றைக்கு போராட்டம், தடியடி, பலி என நாடே கண்டிராத வகையில் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
(அமைச்சர் உதயகுமார் குறுக்கிட்டார்)


அமைச்சர் உதயகுமார்:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு வீடுவீடாகக் கூட பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனா். இந்த விவகாரத்தில் தமிழகத்தில் வன்முறை ஏற்படுமேயானால் அதை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். தமிழகத்தில் திமுககூட பேரணி நடத்தியது. வன்முறை நடைபெற்றதா என்றால், இல்லை...
(இவ்வாறு அவர் பேசிக் கொண்டே இருந்தார். உடனே எதிர்க்க்டசித் துணை தலைவர் துரைமுருகன் எழுந்தார்)
துரைமுருகன் : மற்ற அமைச்சா்கள் சுருக்கமாக பதில் சொல்கிறார்கள். உதயகுமார் மட்டும் பொதுக் கூட்டத்தில் பேசுவது போல பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவரை பேசவிடாமல் அவர் இப்படி செய்தால் நாங்களும் மொத்தமாக எழுந்து பேசி, அவரை பேச விடாமல் செய்வோம்.


(இவ்வாறு துரைமுருகன் கூறியதும் அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவினரும் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்தார்)


முதல்வர் : மூத்த உறுப்பினர் துரைமுருகன், அமைச்சரை மிரட்டப் பார்க்கிறார். எங்களை யாரும் மிரட்ட முடியாது. நாங்கள் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் எப்படி சொல்லலாம்? குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் என்பது மிக முக்கியமான விவகாரம். இதை பற்றி விளக்கமாகத்தான் பதில் அளிக்க முடியும். அதைத் தடுப்பேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. இந்த அவையின் மூத்த உறுப்பினா் துரைமுருகன் கூறுவதை கவனத்துடன் கேட்டு, நிறைவேற்றி வருகிறோம். அவா் இப்படிப் பேசுவது வருத்தமளிக்கிறது.
(முதல்வர் பேசிய பிறகும் அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே மோதல் நீடித்தது. அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு பேசினார்)


சபாநாயகர்: முதல்வா் என்னிடம் அனுமதி பெற்றுத்தான் பேசினார். நான் எழுந்து நிற்கும்போது முதல்வா் இருக்கையில் அமா்ந்து விட்டார். ஆனால், திமுக உறுப்பினா்கள் அமராமல் இருக்கிறீர்கள். எல்லோரும் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்.
துரைமுருகன்: மற்ற அமைச்சா்கள் எல்லாம் சுருக்கமாக பதில் அளிக்கிறார்கள். அதைப்போல வருவாய்த் துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும் என்றுதான் கூறினேனே தவிர, வேறு ஒன்றுமில்லை.
இவ்வாறு அவையில் விவாதம் நடைபெற்றது.


You'r reading எங்களை மிரட்ட முடியாது.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.. சட்டசபையில் கடும் மோதல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அதிகம் படித்தவை