டாஸ்மாக் கடைகளை மூட ஊராட்சிகளுக்கு அதிகாரம்.. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

by எஸ். எம். கணபதி, Jan 22, 2020, 08:54 AM IST

டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கான அதிகாரத்தை ஊராட்சிகளுக்கு ஏன் அளிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றினால், அதை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது பற்றி அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று(ஜன.21) விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, அரசு விளக்கம் அளிப்பதற்கு காலஅவகாசம் கோரினார்.

அப்போது, பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு ஆஜராகி, மகாராஷ்டிராவில் மதுபானக் கடைகளை மூடும் அதிகாரம் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல், இங்கும் அதிகாரம் அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார். மேலும், அரசே மதுபானம் விற்பது தவறு என்றும், பொங்கலையொட்டி விற்பனை இலக்கு வைத்து ரூ.605 கோடிக்கு மதுபானம் விற்றிருக்கிறார்கள் என்றும் கூறினார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:
மதுபானக் கடைகள் இருக்க வேண்டிய இடங்களை தீர்மானிக்கும் அதிகாரம், கிராம சபை, ஊராட்சிகள் உள்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கினால் என்ன? இதற்காக தமிழ்நாடு சில்லரை மது விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே அரசுதரப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

ஆனால், பத்து மாதங்கள் கடந்தும் அரசுதரப்பில் பதில் வரவில்லை. தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே மேற்கொள்கிறது. மக்கள் நலன் சார்ந்த அரசு, மக்களின் ஆரோக்கியம் சார்ந்த நலனையும் பேணி காக்க வேண்டும்.

அதனால், சமூக நலனை கருத்தில் கொண்டு ஒரு இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டுமா?, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கிராம சபைகள் உள்ளிட்ட பஞ்சாயத்துகளுக்கு வழங்கும் விதமாக ஏன் சட்டத் திருத்தம் கொண்டுவரக்கூடாது?

இது குறித்து அரசு அதிகாரிகள் விரிவாக ஆலோசித்து அது பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள தனிமனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான ஷரத்துக்களையும் மனதில் வைத்து அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Leave a reply