வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பணியாற்ற தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு தேர்தல் பணியாற்றினார். அவர் ஐ- பேக் என்ற அமைப்பை நடத்துகிறார். அதில் ஐ.ஐ.டி உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களை வகுத்து கொடுத்தல், தேர்தல் பணியில் உள்ள சுணக்கங்களை கண்டுபிடித்தல், உள்கட்சிப் பூசலை சரி செய்தல், எதிரணியினரின் சாதக, பாதங்களை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இவர்களின் பணியால்தான் 2014ல் நரேந்திர மோடி வெற்றி பெற்றார் என்று சொல்வார்கள்.
இதன்பின்னர், பிரசாந்த் கிஷோர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு தேர்தல் பணியாற்றினார். அவரது பணியில் வியந்த நிதிஷ்குமார் அவரை தனது கட்சியில் சேர்த்து துணை தலைவர் பதவி கொடுத்தார். ஆனால், சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி போன்றவற்றை பிரசாந்த் கிஷோர் கடுமையாக எதிர்த்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தார். மேலும், டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சிக்கு பணியாற்றினார். இது பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தும் நிதிஷ்குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை நிதிஷ்குமார் தனது கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில், டெல்லி தேர்தலை முடித்து விட்டு பிரசாந்த் கிஷோர் நிறுவனம், தமிழகத்தில் திமுகவுக்கு பணியாற்ற உள்ளது. இதுபற்றி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரே எண்ணம் கொண்ட அறிவார்ந்த இளைஞர்கள், ஐ-பேக் (இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி) அமைப்பின் கீழ் நம்முடன் இணைந்து 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போகிறோம். அதன் உதவியுடன், தமிழகம் முன்பு பெற்றிருந்த பொலிவை மீண்டும் பெறுவதற்கான நம்முடைய திட்டங்கள் வடிவம் பெறும் என கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு, இந்த வாய்ப்பினை வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், உங்களது திறமையான தலைமையில், தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவும், 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற உதவுவதற்காக இணைந்து பணியாற்றுவதில் எங்களுடைய தமிழக அணி ஆர்வமுடன் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.