காவிரி டெல்டா மாவட்டங்கள்.. வேளாண் மண்டலமாக அறிவிப்பு.. முதலமைச்சர் தகவல்..

by எஸ். எம். கணபதி, Feb 10, 2020, 09:29 AM IST

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் ஆயிரத்து 22 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று(பிப்.9) நடைபெற்றது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, விவசாய கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

நான் அமெரிக்கா சென்றிருந்த போது, பப்பலோ நகரில் உள்ள பெரிய கால்நடைப் பண்ணையை பார்வையிட்டேன். அங்கு கேட்டறிந்த அதிநவீன உத்திகளை, இந்த கால்நடை பூங்காவில் செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த கால்நடை பூங்கா, 1100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதன் முதல் பிரிவில் நவீன கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை செயல்விளக்கங்களை கால்நடை விவசாயிகளுக்கு அளிக்கும் வகையில் கறவை மாட்டுப் பண்ணை ஆகியவை அமைக்கப்படும். காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய நாட்டுமாடு இனங்களின் இனப்பெருக்க பண்ணையும், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி போன்ற நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கப் பிரிவுகளையும் உள்ளடங்கிய கால்நடை பண்ணையாக உருவாக்கப்படும்.

அதேபோல, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, சென்னை சிவப்பு, கீழக்கரிசல், வேம்பூர், திருச்சி கருப்பு, கோயம்புத்தூர், கச்சைக்கட்டி கருப்பு, செவ்வாடு மற்றும் நீலகிரி போன்ற நாட்டு செம்மறி ஆடுகள் மற்றும் கன்னி ஆடு, கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு போன்ற வெள்ளாடுகளின் இனப்பெருக்கப் பிரிவுகளையும் உள்ளடக்கிய பண்ணையாக உருவாக்கப்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த வெண்பன்றிப் பண்ணையும் அமைக்கப்படும்.

2வது பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை பாதுகாத்து பதப்படுத்துதல் சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் உருவாக்கப்படும். மீன்வள மாதிரி வளாகத்தில் மீன்குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் தரமான மீன்குஞ்சுகள், மீன் வளர்ப்போருக்கு வழங்கப்படும்.
3வது பிரிவில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உயர் கல்வி, ஆராய்ச்சி, விவசாயிகளுக்கான பயிற்சி மையம், தொழில் முனைவோர் பயிலரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய வளாகம் அமைக்கப்படும். கால்நடை மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும். இதில் 80 கால்நடை மருத்துவப் படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்படும்.

மத்திய அரசு என்ன திட்டம் கொண்டு வந்தாலும், மாநில அரசு தடையில்லாச் சான்று அளிக்காமல், அங்கு பணிகளை தொடங்கவே முடியாது. இது எதிர்க்கட்சி தலைவருக்கும் தெரியும். மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அ.தி.மு.க. அரசு ஒரு போதும் நெடுவாசல் திட்டத்திற்கு தடையில்லாச் சான்று வழங்காது என்று பலமுறை நான் வலியுறுத்தி வருகிறேன். தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் திட்டத்திற்கு வித்திட்டது தி.மு.க.வில் அங்கம் வகிக்கின்ற டி.ஆர்.பாலுதான்.

1996-ம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத்துறை இணை மந்திரி டி.ஆர்.பாலு, இத்திட்டத்தை தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து, 2010-ம் ஆண்டு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றார். அதேபோல ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வுப்பணி தொடங்க, 4 ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது தி.மு.க. அரசுதான். அதுவும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்தான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், இத்திட்டத்திற்கான அனைத்து உதவியையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அப்போதைய தி.மு.க. அரசு கூறியது. ஆனால் தற்போது தங்களது பொய் பிரசாரம் மூலம் தங்கள் கட்சியினரை திரட்டி, அங்கே போராட்டம் செய்வோம் என்று பிரச்சினை கிளப்பி வருகின்றனர்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்ததே தி.மு.க.தான், நிறைவேற்றியதும் தி.மு.க.தான். அதை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. அரசு.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகின்றேன்.

நீண்ட காலமாக டெல்டா பகுதியிலே இருக்கின்ற விவசாய பெருமக்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே, அந்த உள்ளக் குமுறல்களை எங்களுடைய அரசு உணர்வுபூர்வமாக தெரிந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை செயல்படுத்திட சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து, வழிமுறைகளை ஆராய்ந்து, இதற்காக ஒரு தனிச் சட்டம் இயற்றிட அ.தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றேன்.
இப்பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு அ.தி.மு.க. அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழகத்திலே இனி கொண்டு வர முடியாது, அதற்கு நாங்கள் அனுமதியும் அளிக்க மாட்டோம்.

எனினும், காவிரி டெல்டா பகுதியில் விளையும் விளைபொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளையும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளையும் தேவைக்கேற்ப இந்த அரசு ஊக்குவிக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

You'r reading காவிரி டெல்டா மாவட்டங்கள்.. வேளாண் மண்டலமாக அறிவிப்பு.. முதலமைச்சர் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை