சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் அணியும் ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து ஐஐடி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை ஐஐடியில் துறைமுக தொழில் நுட்ப ஆலோசனை மையம் அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சாகர்மாலா திட்டத்தின் இணை இயக்குநர் அகர்வால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறைவணக்கம் பாடப் போவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது 3 மாணவர்கள் மேடை ஏறி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில், ‘‘மகா கணபதிம் பஜே’’ என்ற பாடலை பாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வந்த பல மாணவர்கள், அரைக்கால் டிரவுசர் மற்றும் சாதாரண டி-ஷர்ட் அணிந்தபடி பங்கேற்றிருந்தனர். அப்படி அரை கால் டவுசர் அணிந்து விழாவிற்கு வந்தது விருந்தினர்களை அவமதிப்பதாக இருப்பதாக கருதி தற்போது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது ஆடை கட்டுப்பாட்டிற்கான விதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அரைக்கால் டிரவுசர் அணிந்து வர தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மேலும், வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முழுக்கை சட்டை மற்றும், பார்மல் பேன்ட் அணிந்து வர வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்தது, மதக்கடவுளை போற்றி பாடச்செய்வது, சமஸ்கிருத மொழியில் பாடுவது எல்லாம் பிரச்சனையாக கருதாமல், அரைக்கால் டவுசர் அணிந்து வந்ததை ஒரு பிரச்சனையாக கருதுவதை மாணவர்களை அவமதிக்கும் செயல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.