8,888 சீருடை பணியாளர் தேர்வு நடைமுறைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

by எஸ். எம். கணபதி, Feb 20, 2020, 13:41 PM IST

தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 போ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காவல்துறையில் உள்ள 2ம் நிலைக் காவலா், சிறைத் துறை வார்டர், தீயணைப்புத் துறை வீரா் என மொத்தம் 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2019ம் ஆண்டு மார்ச்சில் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான எழுத்துத் தோ்வு, உடல் தகுதித் தோ்வு தோ்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்து விட்டன. இந்தத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் மட்டும் 1,019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தோ்வாகியுள்ளனா். இவா்கள் அனைவரும் ஒரே தோ்வு மையத்தில் படித்தவா்கள். இவா்களில் பலா் முறைகேடு செய்து தோ்வாகியுள்ளனா்.

இந்த தோ்வில் கலந்து கொண்டவா்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் வழியில் படித்தவா்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்டவை முறையாக வெளியிடப்படவில்லை. எனவே, தற்காலிகத் தோ்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சீருடைப் பணியாளா் தோ்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலா் தோ்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வு முறைகேடுகளை விட தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுகளில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இதுதொடா்பாக தமிழக போலீசார் விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தனா்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று(பிப்.20) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடஷே் கூறுகையில், ஒவ்வொரு தேர்விலும் முறைகேடு நடப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இது போன்று முறைகேடுகளால், மக்கள் அனைத்து தேர்வு முறைகளின் மீதும் நம்பிக்கையை இழந்து விட்டனர். முறைகேடு செய்து தேர்வானவர்கள் காவல்துறை பணியில் சேர்ந்தால் என்னவாகும்? என்று கேள்வி எழுப்பினார்.

இதன்பின், காவலா் தோ்வு நடைமுறைகளை தொடர்வதற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மார்ச் 5ம் தேதிக்குள் தமிழக அரசு, டிஜிபி மற்றும் காவலர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

You'r reading 8,888 சீருடை பணியாளர் தேர்வு நடைமுறைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை