நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும், குறிப்பாக முஸ்லிம்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது என்றும், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் முதல் குரல் கொடுப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். கடைசியாக அவர் அளித்த பேட்டியில், டெல்லியில் நடந்த கலவரத்திற்கு மத்திய உளவுத் துறையின் தோல்வியே பொறுப்பாகும் என்றும், கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டுச் செல்லுங்கள் என்று அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசியிருந்தார். ஆனால், அப்போதும் சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது வீணானது என்றும், போராட்டங்களை இதற்கு மேலும் அனுமதித்தால் எதிர்காலத்தில் ரொம்ப கஷ்டம் என்றும் கூறியிருந்தார். இது போராடும் முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ரஜினிக்குத் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷா உலவி ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ரஜினியின் கருத்து தவறானது என்றும் முஸ்லிம்களின் போராட்டம் குறித்து விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி, முஸ்லிம் மதகுருமார்களைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, காஜா முயீனுத்தீன் பாகவி, அன்வர் பாதுஷா உலவி, முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி ஆகியோர் ரஜினியை நேற்று அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.
இதற்கு பின்பு, செய்தியாளர்களிடம் காஜா முயீனுத்தீன் பாகவி கூறுகையில், முஸ்லிம்களின் அச்ச உணர்வை ரஜினி புரிந்து கொண்டார். அதில் உள்ள நியாயமான காரணங்களைப் போக்கி நாட்டில் அமைதி ஏற்படுத்தத் தனது பங்களிப்பை அளிப்பதாக உறுதி கூறினார் என்றார்.
இதற்கு பின்பு, ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:
இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ரஜினி பதிவிட்டுள்ளார்.