தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 8 லட்சத்து 16,359 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று காலை தொடங்குகிறது. மார்ச் 24ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 7,276 பள்ளிகளிலிருந்து மொத்தம் 8 லட்சத்து 16,359 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் படித்துத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4 லட்சத்து 54,367 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையத்திற்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வைக் கண்காணிக்கும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் செல்போன் வைத்திருக்கக் கூடாது. செல்போன் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாணவர்கள் காப்பி அடிக்க முயற்சித்தல், தேர்வு அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தல், விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
காப்பி அடிப்பதற்குப் பள்ளி நிர்வாகமே உடந்தையாக இருந்தால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்திடவும் பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்யப்படும். தேர்வு தொடர்பாகப் புகார்கள் கூறுவதற்குத் தேர்வுத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படும். இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 93854 94105, 93854 94115, 93854 94120 ஆகிய எண்களில் இந்த தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக மொத்தம் 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.