பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
தமிழகம், புதுவையில் இன்று முதல் #12ThExam எழுதும் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்காலக் கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள்!
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் வாழ்வில் பிளஸ் 1 & 2-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவையாகும்.
தேர்வுக்காகப் படிக்கும் போதும், தேர்வு எழுதும் போதும் பதற்றத்தைத் தவிர்த்து, கவனத்தை அதிகரிக்க வேண்டும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்குப் பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.