திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97.
திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வு காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 24ம்தேதி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருக்கும் போதெல்லாம் சென்று அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தார். அவர் நேற்று மாலையில் மருத்துவமனைக்குச் சென்று அன்பழகன் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பிறகு வீட்டுக்குத் திரும்பிச் சென்ற மு.க.ஸ்டாலின், மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரவே இரவு 11 மணியளவில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். இந்நிலையில், நள்ளிரவு 1.10 மணிக்கு அன்பழகன் மரணம் அடைந்தார் என அறிவிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் மற்றும் மருத்துவமனையில் கூடியிருந்த கண்ணீர் விட்டு அழுதனர்.
க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் எம்.கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 1922-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தமிழ் படித்து முடித்து விட்டு, 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார். 1945-ல் வெற்றிச்செல்வி என்பவரைத் திருமணம் முடித்தார். இவர்களுக்கு அன்புச்செல்வன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
வெற்றிச்செல்வி மறைவிற்குப் பிறகு சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற இரு மகன்களும், ஜெயக்குமாரி என்னும் மகளும் உள்ளனர்.
அன்பழகன், பெரியார் மீது ஈர்ப்பு கொண்டு திராவிடர் கழக கொள்கைகளுக்காகப் பாடுபட்டாலும், கடந்த 1957-ம் ஆண்டுதான் பேராசிரியர் பணியை விட்டு விலகி, நேரடியாக அரசியல் களத்திற்கு வந்தார். அந்த ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார். 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்தார். 1971-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.
1971-ம் ஆண்டில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரானார். இதற்கு பிறகு, 1989-1991, 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராகவும், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
அண்ணா மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலாளர் பதவியிலிருந்த நெடுஞ்செழியன், கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தார். இதையடுத்து, 1977-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளராக அன்பழகன் பொறுப்பேற்றார். கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியுற்றார்.
திமுகவில் அன்பழகன் மிகவும் மென்மையானவர். அவர் மீது பற்று இல்லாத ஒரு தொண்டரைக் கூட காண முடியாது. அன்பழகன் ஒரு முறை பேசும் போது, நான் முதலில் மனிதன், 2வதாக அன்பழகன், 3வதாக பகுத்தறிவுவாதி, 4வதாக அண்ணாவின் தம்பி, 5வதாக கலைஞரின் நண்பன். இதை எனது இறப்புதான் மாற்றும் என்று சொன்னார். திமுகவில் எத்தனை சுழல் வந்தாலும், கடைசி வரை அன்பழகன் அப்படியே வாழ்ந்து மறைந்தார்.