பேராசிரியர் ஊட்டிய முப்பால்.. மு.க.ஸ்டாலின் இரங்கல்..

by எஸ். எம். கணபதி, Mar 7, 2020, 10:50 AM IST

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது:
திராவிடச் சிங்கம் சாய்ந்து விட்டது. சங்கப்பலகை சரிந்து விட்டது. இனமான சமயம் உடைந்து விட்டது. எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்து விட்டார். என்ன சொல்லித் தேற்றுவது? எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை?

பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்! முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்! எனது சிறகை நான் விரிக்க வனமாய் இருந்தவர்! என்ன சொல்லி என்னை நானே தேற்றிக்கொள்வது?

தலைவர் கலைஞர் அவர்களா என்னை வளர்த்தார்! பேராசிரியர் பெருந்தகையோ என்னை வளர்ப்பித்தார்! எனக்கு உயிரும், உணர்வும் தந்தவர் கலைஞர். எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர். இந்த நான்கும்தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது.

“எனக்கு அக்காள் உண்டு. அண்ணன் இல்லை. பேராசிரியர்தான் என் அண்ணன்” என்றார் தலைவர் கலைஞர்! எனக்கும் அத்தை உண்டு. பெரியப்பா இல்லை. பேராசிரியப் பெருந்தகையையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன். அப்பாவை விடப் பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் சிரமம். ஆனால் நானோ பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன். அவரே என்னை முதலில், “கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்” என்று அறிவித்தார். எனக்கு வாழ்வின் பெருமையே எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தைப் பிசைந்தது.

அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் சொல்வேன்?! பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்? இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!

பேராசிரியப் பெருந்தகையே! நீங்கள் ஊட்டிய இனப்பால்-மொழிப்பால்-கழகப்பால் இம் முப்பால் இருக்கிறது. அப்பால் வேறு என்ன வேண்டும்?! உங்களது அறிவொளியில் எங்கள் பயணம் தொடரும் பேராசிரியப் பெருந்தகையே!
கண்ணீருடன் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

You'r reading பேராசிரியர் ஊட்டிய முப்பால்.. மு.க.ஸ்டாலின் இரங்கல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை