திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

by எஸ். எம். கணபதி, Mar 10, 2020, 08:54 AM IST

ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர்கள் மூவரும் நேற்று மனுத் தாக்கல் செய்தனர்.தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 13ல் மனு தாக்கல் முடிவடைகிறது.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று(மார்ச்9) வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரியான சட்டசபைச் செயலாளர் சீனிவாசனின் அலுவலகத்துக்கு நேற்று மதியம் அவர்கள் வந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன், தி.மு.க. கொறடா சக்கரபாணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் டெபாசிட் தொகை செலுத்தி வேட்புமனுவைச் சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர். பின்னர், 3 பேரும் உறுதிமொழி வாசித்தனர்.

தொடர்ந்து வேட்பாளர்களும், முக.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரும் சபாநாயகர் தனபாலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். பின்னர் அங்கிருந்து கருணாநிதி சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

READ MORE ABOUT :

Leave a reply