திமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்..

by எஸ். எம். கணபதி, Mar 10, 2020, 08:59 AM IST

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று(மார்ச்9) வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் மனுவுடன் தங்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.



திருச்சி சிவா சொத்து விவரம் வருமாறு:
ஒரு கோடியே 60 லட்சத்து 94,537 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் (கார், நகை, டெபாசிட் உள்ளிட்டவை), மனைவி பெயரில் ரூ.37.65 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள்.

தனது பெயரில் 2 கோடியே 62 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகள், மனைவி பெயரில் ரூ.20.50 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும், ரூ.25 லட்சம் கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.



அந்தியூர் செல்வராஜ் தனது மனுவில், தனது பெயரில் 33 லட்சத்து 32,350 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் 5 லட்சத்து 55,437 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது பெயரில் ரூ.68.50 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.83.50 மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளதாகவும் கூறியிருக்கிறார். தனக்கு ரூ.3.10 லட்சமும், மனைவிக்கு ரூ.1.84 லட்சமும் கடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.



என்.ஆர்.இளங்கோ தனது மனுவில் தன்னிடம் ஒரு கோடியே 81 லட்சத்து 15,760 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், தனது மனைவி பெயரில் 45 லட்சத்து 54,938 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் இருப்பதாகக் கூறியிருக்கிறார். தனது பெயரில் ரூ.3.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாகவும், ரூ.1.51 கோடி கடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தி.மு.க. 3 வேட்பாளர்களையும், அ.தி.மு.க. 3 வேட்பாளர்களையும் மட்டுமே நிறுத்தியுள்ளன. எனவே, 6 வேட்பாளர்களுமே போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, வரும் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறாது. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான 18ம் தேதி மாலையில் 6 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

You'r reading திமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை