டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரானா பாதித்து சிகிச்சை பெற்றார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது தெரியவந்தது. இது குறித்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
டெல்லியில் இருந்து சென்னை வந்த வடமாநில இளைஞர்(வயது 20) ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளார். ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டது.
இது வரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஒரு லட்சத்து 89,750 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2,984 பேர் தனிமைப்படுத்தப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். காய்ச்சலில் இருந்த 32 பேர் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.
இது வரை 222 பேரின் ரத்தமாதிரிகள் சோதனையிடப்பட்டதில் 166 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரிந்தது. 55 மாதிரிகள் இன்னும் ஆய்வில் உள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது, கொரோனா அதிகம் பாதித்துள்ள மகாராஷ்டிரா, கேரளாவில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.