ஜி.கே.வாசன், திருச்சி சிவா உள்பட 6 பேர் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு..

by எஸ். எம். கணபதி, Mar 19, 2020, 11:17 AM IST

திமுகவில் 3 பேர், அதிமுகவில் 2 பேர் மற்றும் ஜி.கே,வாசன் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக சட்டசபையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் கிடைப்பார்கள். திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமியும், அதன் கூட்டணியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் மனுத்தாக்கல் செய்தனர்.

மனுக்கள் வாபஸ் பெற இறுதிநாளான நேற்று இந்த 6 பேரைத் தவிர வேறு யாரும் களத்தில் இல்லை. இதையடுத்து, 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இது குறித்து, சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குச் சட்டசபைச் செயலாளர் சீனிவாசன், சான்றிதழ்களை வழங்கினார்.

READ MORE ABOUT :

Leave a reply