கொரோனா வைரஸ் இருக்கிறதா என 30 நிமிடத்தில் பரிசோதனை செய்வதற்கு உதவும் ஒரு லட்சம் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) விரைவில் வந்து சேரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழகத்தில் இது வரை 584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டக் கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிப்பதால், கொரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது வரை விமான நிலையங்களில் 2 லட்சத்து 10,538 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் பொருட்டு, 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யக் கூடிய ஒரு லட்சம் (ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்) கருவிகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை வந்து சேரும். இவற்றின் மூலம், அதிகமானோருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 38 மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடமாடும் காய்கறிக் கடைகள் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம். அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.