கோபம் வந்தால் போதுமா? சிந்தனைத்திறன் இல்லையே.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..

M.K.Stalin cricise Admk govt. for reopening Tasmac shops.

by எஸ். எம். கணபதி, May 5, 2020, 17:00 PM IST

நாம் ஆலோசனைகளைச் சொன்னால் அரசுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத்திறனும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை எங்கே போய் நிற்கும் எனக் கணிக்க முடியாததாகி இருக்கிறது. தொற்று இல்லை என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் எண்ணிக்கை கூடுகிறது. எப்படிப் பரவுகிறது? இதுவரை பரிசோதனையே செய்யாமல் இப்போது செய்கிறார்களா? மாவட்ட வாரியாகச் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை என்ன? ஆரம்பத்தில் எண்ணிக்கையை அறிவிக்கும் போதெல்லாம், எவ்வளவு பேருக்குப் பரிசோதனை செய்தீர்கள்? என்று கேட்டேன். இப்போது பரிசோதனைகளைச் செய்யச் செய்ய அனைத்தும் வெளிச்சத்துக்கு வருகின்றன.

மார்ச் 24-ல் பேருந்து நிலையங்களிலும், ஏப்ரல் 25-ல் கோயம்பேடு காய்கறி அங்காடியிலும் பல்லாயிரம் பேர் கூடியது திட்டமிடுதலிலிருந்த மெத்தனத்தில்தானே?
மார்க்கெட்டில் தினமும் மக்களையும், வியாபாரிகளையும் தனி மனித விலகல் இல்லாமல் கூடுவதற்கு வழி விட்டதுதான் அரசாங்கம் செயல்படும் அழகா? தங்கள் இடத்திலேயே தேவைகள் பூர்த்தியானால் மக்கள் எதற்காக வெளியே வரப்போகிறார்கள்? நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மக்களுக்கு அறிவியுங்கள் என்று நான் சொன்னது இதற்குத்தான்.

சென்னையில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய போதே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்க வேண்டும். கட்டுக்கடங்காமல் போன பிறகு மே 1-ல் நியமிக்கிறார்கள். பேரிடர் காலங்களில் முதலிலேயே ஒருங்கிணைப்புக் குழு அமைப்பார்கள். பல்வேறு தரப்பினர் இடம்பெறும் அப்படிப்பட்ட குழுவே நியமிக்கப்படவில்லை.
சென்னையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சிறப்புக் கவனம் என்ன செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான் 7-ம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளது அரசு.

அப்படியானால் ஊரடங்குக்குப் பொருள் என்ன?
ஆலோசனைகளைச் சொன்னால் அரசுக்குக் கோபம் வருகிறது. ஆனால், இதுபோன்ற சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத்திறனும் இல்லை. ஊடரங்கில் தளர்வுகள் செய்து, எல்லாம் சரியாகி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்கத் தமிழக அரசு நினைக்கிறது. மக்களின் உயிர் மகத்தானது. அதனை அரசியலால், அறியாமையால், ஆணவத்தால் இழந்துவிடக்கூடாது.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading கோபம் வந்தால் போதுமா? சிந்தனைத்திறன் இல்லையே.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை