தமிழகத்தில் கொரோனா சாவுகளை மறைத்து, பலி எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுகிறது. இதை ஆங்கில நாளிதழ் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து கொரானா பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 90,787 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில், 3289 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 34,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 307 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமானாலும் இறப்பு மிகவும் குறைவு என்று முதல்வரும், அமைச்சர்களும் தினந்தோறும் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். ஆனால், கொரோனா சாவு எண்ணிக்கையை அரசு மறைத்து வருகிறது என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.அதாவது, கடந்த ஜூன் 8ம் தேதியன்று தமிழக அரசு வெளியிட்ட கொரோனா மருத்துவ அறிக்கையில் பலி எண்ணிக்கையை 224 என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதே நாளில் டைம்ஸ் நிருபர், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள இறப்பு அறிக்கையை ஆய்வு செய்த போது, 236 கொரோனா சாவு மறைக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. ஜூன் 8ம் தேதியன்று கொரோனா பலி 460 ஆக இருந்துள்ளது.
இதில், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 20 பேரின் மரணம் உள்பட 236 மரணங்களை, தமிழக அரசு அறிக்கையில் காட்டவே இல்லை. எனவே, அரசு வேண்டுமென்றே பலி எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அரசு வேண்டுமென்றே இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவில்லை என்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து புள்ளிவிவரங்கள் சேகரிப்பில் தாமதம் என்றும் அதிகாரிகள் தரப்பில் காரணம் கூறப்படுகிறது.
மேலும், பொதுச் சுகாதாரத் துறை அதிகாரி வடிவேலன் தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் குழுவே, கொரோனா இறப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாகவும் மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர்.எனவே, தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என்று அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமாகச் சொல்லி வந்த ஒன்றும் தவறான தகவல் எனத் தெரிய வருகிறது.