ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி தற்கொலை முயற்சி..

Nalini attempted suicide in Vellore prison

by எஸ். எம். கணபதி, Jul 21, 2020, 14:51 PM IST

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு மே21ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் தண்டனை பெற்ற பலர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். மேல்முறையீட்டுக்குப் பின் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர்.வேலூர் சிறையில் உள்ள நளினி தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து வந்தார். எனினும், அவர் புழல் சிறைக்கு மாற்றப்படவில்லை. இந்நிலையில், நளினி சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், 29 ஆண்டுகளாக வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்னொரு ஆயுள் கைதிக்கும் நளினிக்கும் தகராறு ஏற்பட்டது. ஜெயிலர் அல்லி ராணியிடம் அந்த கைதி புகார் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக, நளினியின் சிறை அறைக்கு வெளியே நின்றபடி, ஜெயிலர் அல்லிராணி அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையால் மன உளைச்சலுக்கு உள்ளான நளினி விசாரணை நடந்து கொண்டிருந்த போதே தூக்குப் போட முயன்றுள்ளார். உடனே, ஜெயிலர் அல்லி ராணி அந்த அறைக்குள் சென்று நளினியின் தற்கொலை முயற்சியைத் தடுத்துக் காப்பாற்றியுள்ளார். கடந்த 29 வருடங்களில் நளினி தற்கொலைக்கு முயன்றதில்லை. ஆனால், தற்கொலை செய்ய முயன்றதற்கு இது மட்டும் தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா எனத் தெரியவில்லை என்றார்.

You'r reading ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி தற்கொலை முயற்சி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை