2 மணி நேரமாக கிடந்த நர்ஸின் சடலம்.. போராடிய உறவினர்கள்.. கல்லறை முன்பு நேர்ந்த துயரம்!

by Sasitharan, Aug 3, 2020, 19:31 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா. செவிலியரான இவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா சோதனை செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து சோதனை முடிவில் அர்ச்சனாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. இதன்பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சையிலிருந்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை.

கொரோனா அர்ச்சனாவின் உயிரைப் பறித்தது. இறந்த அர்ச்சனாவின் உடலை, சொந்த ஊரான நவல்பூர் கொண்டுச் சென்று அங்குள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்ய நினைத்தனர் அவரது உறவினர்கள். அதன்படி சொந்த ஊர் கொண்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் நினைத்தது போல் அங்கு நடக்கவில்லை. கல்லறை தோட்டத்துக்கு அர்ச்சனாவின் உடலை கொண்டு சென்றபோது அங்கு வந்த அந்த ஊர் மக்கள், அர்ச்சனாவின் உடனை அங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கிராம மக்கள், அர்ச்சனா உறவினர்களிடையே, தகராறு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதன்பின், சம்பவம் அறிந்துவந்த போலீஸார், கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணிநேரம் அர்ச்சனாவின் சடலம் கல்லறை முன்பு இருந்தது. அவரின் உறவினர்கள் அடக்கம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் ஒருவழியாக போலீஸின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்று, கிராம மக்கள் ஒத்துழைக்க அர்ச்சனாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சமீபத்தில் இதேபோன்று சென்னையில் கொரோனா பாதித்த டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது பெரும் சர்ச்சையாக மாறி உயர் நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றமும், அரசும் கடும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


More Tamilnadu News

அதிகம் படித்தவை