திமுகவில் அதிருப்தியாக இருந்த கு.க.செல்வம் எம்.எல்.ஏ, இன்று பாஜகவில் சேருகிறார்.
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம், இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் சேரவிருக்கிறார். இதை பாஜக வட்டாரமும், கு.க.செல்வத்தின் ஆதரவாளர்களும் உறுதி செய்துள்ளனர்.கு.க.செல்வம் ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தவர். அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு நெருக்கமானவராக இருந்தார். கடந்த 1997ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த கு.க.செல்வம், அந்த கட்சியில் செல்வாக்கு பெற்றார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளராகக் களமிறங்கிய தனது முன்னாள் நண்பரான வளர்மதியைத் தோற்கடித்தார். திமுக தலைவராகக் கருணாநிதி இருந்த போதே ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த கு.க.செல்வம், திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், அவருக்கு மா.செ. பதவி கொடுக்கப்படாமல், தலைமை நிலையச் செயலாளர் பதவி தரப்பட்டது. அதனால், திமுக அலுவலகமான அறிவாலயத்தில் கோலோச்சி வந்தார். இந்நிலையில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய சென்னை மேற்கு மாவட்டத்தின் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன், சமீபத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, மாவட்டச் செயலாளர் பதவியை கு.க.செல்வம், அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன் உள்படச் சிலர் குறிவைத்தனர். கு.க.செல்வத்தின் ஆதரவாளர்கள், அவருக்குத்தான் மா.செ. பதவி கிடைக்கும் என்று உறுதியாகக் கூறி வந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசுவை சென்னை மாவட்டப் பொறுப்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். கட்சியில் சீனியர்களை ஓரம்கட்டி, இளைஞர் அணியைச் சேர்ந்தவருக்கு மா.செ. பதவியை உதயநிதி பெற்றுத் தந்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதே சமயம், சீனியர்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் அளித்தது.இந்த சூழலில்தான், கு.க.செல்வம் அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறுகிறார். மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்ற சிற்றரசு, நிச்சயமாக ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியையும் கைப்பற்றி விடுவார். தொகுதியில் மீண்டும் சீட் கிடைக்காது என்பதை உணர்ந்துதான், கு.க.செல்வம் வெளியேறுகிறார் என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பாஜகவில் சேர்ந்த திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், பாஜகவில் இருந்து மீண்டும் திமுகவுக்கே வந்து விட்டார். அதிமுகவில் இருந்து சென்ற முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இப்படியொரு நிலையில் கு.க.செல்வத்திற்கு அந்தக் கட்சியில் என்ன பதவி கிடைக்கும் என்பது தெரியவில்லை.