பாஜகவுக்கு தாவுகிறோமோ.. அலறியடிக்கும் திமுகவினர்..

திமுகவில் இருந்து பலரும் பாஜகவுக்குத் தாவப் போவதாகச் செய்திகள் வெளியாகவே, திமுக முக்கியப் புள்ளிகளே அலறியடித்து மறுப்பு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தனியாகக் களம் கண்டால் ஒரு கவுன்சிலர் பதவியைக் கூட பிடிக்க முடியாத நிலையில் இருக்கும் பாஜக, இந்த முறை எப்படியும் சட்டசபைக்குள் நுழைந்து விட வேண்டுமெனத் தவிக்கிறது. தற்போது ஏராளமான ஊழல் புகார்கள் மற்றும் வழக்குகளில் அதிமுக அமைச்சர்கள் பலரும் சிக்கியிருப்பதால், எடப்பாடி பழனிசாமி அரசை பாஜகவின் சாதாரண ஆட்கள் கூட மிரட்டிப் பார்க்கிறார்கள்.

இன்னொருபுறம், 25 எம்.பி.க்கள், 80க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், ஆயிரக்கணக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு திமுக பலமாக உள்ளதால், அந்தக் கட்சியை உடைப்பதற்கும் பல முயற்சிகளை மறைமுகமாக பாஜகவினர் கையாளத் தொடங்கியுள்ளனர்.இந்த சூழ்நிலையில், ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த வி.பி.துரைசாமி, மாவட்டச் செயலாளர் பதவி தராததால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் ஆகியோர் பாஜகவுக்குத் தாவினர். ஆனால், அவர்களால் திமுக நிர்வாகிகள் யாரையும் உடன் அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆனாலும், கு.க.செல்வம் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளதால், அவருக்கு பாஜகவினர் தடபுடல் வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, பாஜக ஆதரவு நாளேடான தினமலரில் இன்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதில், அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு காரணமாக, தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பொதுச் செயலர் பதவி கேட்டு, போர்க்கொடி தூக்கி உள்ளார். பொதுச் செயலர் பதவி தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு, பின்னர் ஏமாற்றியதால், கடும் அதிருப்தியில் இருக்கும் துரைமுருகன், எந்த நேரத்திலும், கு.க.செல்வம் போல அதிரடி முடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், தனக்கு பொதுச் செயலர் பதவி தர வேண்டும் என, அவர் பகிரங்கமாக போர்க்குரல் எழுப்பிய தகவல் வெளியாகி உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஏதோ எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில், கழகத்திற்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவது போல், ஒரு செய்தியை அதிலும், தலைப்புச் செய்தியாகத் தினமலர் இன்று(ஆக.7) வெளியிட்டிருக்கிறது. என் மீது ஒரு களங்கத்தைக் கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என் வரலாறு தினமலருக்குத் தெரியாது போலும். எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து ஒரு போராளியாக 1953ம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன் நான்.இது வரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போயிருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து, இருவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு கழகத்திற்காகக் கோஷமிட்டே இருப்பவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பது தினமலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆளுங்கட்சிக்குப் பல்லக்கு தூக்குவது, அமைச்சர்களுக்குக் கவரி வீசுவது, அதனால் ஆதாயம் பெறும் தினமலருக்கு ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் என் இயக்கத் தோழர்கள். தினமலரின் தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது.

இவ்வாறு துரைமுருகன் கூறியிருக்கிறார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சமீபத்தில் மரணமடைந்தார். அந்த பதவிக்கு துரைமுருகனைத் தேர்வு செய்வதாக இருந்தது. அதற்காகத் தேர்தல் நடத்துவதற்குக் கட்சியின் பொதுக்குழு மார்ச் 29ம் தேதி நடப்பதாக இருந்தது. பொதுச் செயலாளர் தேர்தலில் துரைமுருகன் போட்டியிட விரும்பி, பொருளாளர் பதவியில் இருந்து விலகினார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பொதுக் குழு தள்ளி வைக்கப்பட்டது. இதனால், துரைமுருகன் மீண்டும் பொருளாளர் பதவியில் நீடித்தார். இந்த நிலையில், தினமலர் நாளிதழ் இப்படியொரு செய்தி வெளியிடவே அவர் அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதே போல், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கட்சி மாறப் போவதாக சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. இதையடுத்து அவரும் நேற்று மறுப்பு செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். கர்நாடகா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் பாஜக பெரிய கட்சியாக உள்ளதால், அந்த கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களை இழுப்பது சுலபமாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை விடச் சிறிய கட்சியாக பாஜக உள்ளதாலும், அதிலும் குறிப்பிட்டவர்களே அங்குச் சென்றால், அரசியல் எதிர்காலம் வீணாகி விடும் என்று திமுக, அதிமுக புள்ளிகள் பயப்படுகிறார்கள். ஏற்கனவே பாஜகவுக்குச் சென்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் மீண்டும் திமுகவுக்கே வந்து விட்டார். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் பாஜகவில் அதிருப்தியை வெளிப்படையாகக் கூறினார். அவர் திமுக அல்லது அதிமுகவில் விரைவில் இணைவார் என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :