எஜமானரின் உடலை தேடி அலையும் நாய்!.. மூணாறில் ஒரு பாசக் காட்சி

by Sasitharan, Aug 10, 2020, 13:28 PM IST

மூணாறு பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் எஸ்ட்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த 22 குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது. அதில் இருந்த 83 தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. இந்த 80 பேரும் தமிழர்கள். ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், கயத்தாறு, தென்காசியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த 83 பேரும். இவர்களில் 42 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணி முடிய இன்னும் ஒருவார காலம் ஆகும் எனத்தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே, நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் அருகில் இருக்கும் காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகின்றனர் மீட்புத் துறையினர். மோப்ப நாய் உதவியுடன் உடல்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இதுவரை காட்டாற்றில் இருந்து 6 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாயின் பாசம்!

இதற்கிடையே, பெட்டி முடியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் ஒரு நாய் மூன்று நாள்களாக தேடி வருகிறது. ஒவ்வொரு உடலையும் தூக்கி வரும்போதும் அதைப் பார்க்கச் செல்கிறது. அங்குள்ளவர்களுக்கு பரிட்சயமான அந்த நாய் தொடர்பாக விசாரிக்கையில், நாய் தனது எஜமானரைத் தேடி அலைவது தெரியவந்தது. நாய் வளர்த்த தொழிலாளியின் குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பேரிடரில் இருந்து தப்பித்த இந்த நாய் தன்னுடைய எஜமானர் இந்த மண்ணின் கீழ் எங்காவது இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முழு பேரழிவு பகுதியையும் அலசி வருகிறது.

கடந்த மூன்று நாட்களாக, இந்த நாய் எல்லோரையும் போலவே தன்னை வளர்த்தவர்கள் உடலைக் காண்பதற்காக அங்கேயே இருந்து வருகிறது. நேரில் பார்த்தவர்கள், நாயின் பாசத்தையும், பரிதவிப்பையும் நினைத்து வேதனை கொள்கின்றனர்.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை