சாத்தான்குளம் வழக்கில் கைதான சப்இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி..

by எஸ். எம். கணபதி, Aug 10, 2020, 13:45 PM IST

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பால் துரை, கொரோனா பாதித்து உயிரிழந்தார்.கடந்த மாதம், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, இரவு முழுக்க கொடூரமாகத் தாக்கியதால்தான் இருவரும் இறந்தனர் என்று குற்றம்சாட்டி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இது தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கொலை வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு எஸ்.ஐ. பால் துரை, கான்ஸ்டபிள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், சிறப்பு சப்இன்ஸ்பெடர் பால் துரைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று(ஆக.10) அதிகாலை 2.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மனைவி மங்கையர் திலகம் கூறுகையில், எனது கணவருக்கும் சாத்தான்குளம் கொலைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், அவரையும் வழக்கில் சேர்த்திருக்கிறார்கள். அவரை வழக்கில் இருந்து விடுவித்தால்தான், சடலத்தை வாங்குவோம் என்றார்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை