தமிழகத்தின் பிரபல தொழிலதிபர்கள் வி.ஜி.பி. குடும்பத்திற்குள் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. வி.ஜி.பன்னீர்தாஸ் மகன்கள் பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது பெங்களூருவை அடுத்த தல்கட்டபுரா காவல் நிலையத்தில் நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக விளங்கிய தொழில் குடும்பங்களில் ஒன்று, வி.ஜி.பி. குடும்பம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சொத்து பங்கீடு தொடர்பாக இந்த குடும்பத்தின் உறுப்பினர்களுக்குள் மோதல் வெடித்தது.
கடந்த ஆண்டு, விஜிபி சகோதரர்களில் ஒருவரான செல்வராஜின் மகன் வினோத் ராஜுக்குச் சொந்தமான நிலத்தை வி.ஜி.பன்னீர் தாஸின் மகன்கள் பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு மீது கர்நாடக மாநிலத்தில் எப்.ஐ.ஆர் ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், வினோத்தின் சகோதரர் பரத்ராஜ் என்பவரும், தற்போது இதே போன்ற நில மோசடி புகாரை விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: பெங்களூரு வளர்ச்சி ஆணையம், அஞ்சனபுரா பகுதியில் உருவாக்கிய புதிய லே அவுட்டில், எனக்கு மூன்று பிளாட்டுகளை(நிலம்) ஒதுக்கியது. இதை அறிந்த எனது சகோதரர்களான பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகிய மூவரும், நான் எழுதியதைப் போல ஒரு போலி கடிதத்தைத் தயாரித்து, அந்த மூன்று இடங்களையும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர்.பின்னர் அவற்றை மூன்றாம் நபர்களுக்கு விற்பனையும் செய்துவிட்டனர். இந்த மோசடி சமீபத்தில்தான் எனக்குத் தெரியவந்தது.எனவே என்னைப் போல் கையெழுத்திட்டு, போலி ஆவணங்களைத் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்ட பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பரத் ராஜ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தல்கட்டபுரா காவல் நிலைய போலீசார் வழக்கு (எப்.ஐ.ஆர்) பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக போலீசில் பதிவாகியுள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.