2021 தேர்தலில் அதிமுகவுக்கு எடப்பாடிதான் தலைமை.. உதயகுமாரும் ஆதரவு..

by எஸ். எம். கணபதி, Aug 12, 2020, 13:20 PM IST

எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அதிமுக அடுத்த தேர்தலைச் சந்திக்கும் என்று அமைச்சர் உதயகுமாரும், ராஜேந்திர பாலாஜி கருத்தை ஆதரித்துள்ளார். இதனால், அதிமுகவில் உட்கட்சிப்பூசல் சூடுபிடித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். சிறைக்குச் செல்லும் முன்பாக அவர்தான் கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்து விட்டுச் சென்றார்.


இதன்பின், அரசியல் சூழ்நிலைகள் மாறி, ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி அணியும் இணைந்தன. கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சிக்குத் தலைமைப் பொறுப்பை எடப்பாடி பழனிசாமியும் ஏற்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், மோடி கேட்டுக் கொண்டதால்தான் முதல்வர் பதவியை எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்திருப்பதாக ஓ.பி.எஸ். கூறியிருந்தார். தற்போது சட்டசபை பொதுத் தேர்தலுக்கு எட்டு, ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சண்டை மீண்டும் வெடித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதிமுகவின் கட்சி நாளேட்டில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதில், காலமெல்லாம் நீயே நிரந்தர முதல்வராகி... என்று எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த 10ம் தேதி ஒரு பேட்டி அளித்தார். அதில், அதிமுகவின் கொள்கைப்படி தேர்தல் முடிந்ததும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடித்தான் முதல்வரைத் தேர்வு செய்வார்கள் என்று எடப்பாடி அணிக்கு செக் வைத்தார்.ஆனால், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார். ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்து விட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்த தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே! என்று குறிப்பிட்டார்.

இந்த விஷயம் பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்ட போது, அதற்கு இப்போது என்ன அவசரம்? தேர்தல் வரட்டும்... என்று பொடி வைத்துப் பதிலளித்தார். அதாவது, எடப்பாடியே மீண்டும் முதல்வர் என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த சூழ்நிலையில், அடுத்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்த சர்ச்சையை மேலும் கிளறி விட்டிருக்கிறார். மதுரையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ், ஓ,பன்னீர்செல்வம் வழிகாட்டலின்படி அதிமுக செயல்படும். அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்வரை(எடப்பாடி பழனிசாமியை) முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் தற்போது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை அடங்கிப் போய் விட்டால், அத்துடன் எடப்பாடி பழனிசாமி அணியினரின் கை ஓங்கி விடும் என்று ஓ.பி.எஸ். அணியினர் தங்களுக்குள் பேசி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, அதிமுகவில் தென்மாவட்ட ஆதிக்கம் வீழ்ச்சியுற்று, கொங்கு மண்டல ஆதிக்கம் ஓங்கி விட்டதாக ஓ.பி.எஸ். அணியினரிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும் முன்பாக இந்த அதிருப்திகளுக்குத் தீர்வு கண்டு, ஒரு புதிய பார்முலாவை ஏற்படுத்தாவிட்டால், மீண்டும் அதிமுக இரு அணிகளாக உடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை