திருச்சி மன்னார் புரம் பகுதியில் நேற்று இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்ததில், அந்த காரில் போதைப்பொருளான அபின் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் அபின் கடத்திய திருச்சியைச் சேர்ந்த சரவணன், ஜெயப்பிரகாஷ் என்ற இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் இந்த கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவரவே, அவர்களை வளைக்கத் திட்டமிட்டனர் போலீஸார். அதன்படி, பெரம்பலூரைச் சேர்ந்த மருத்துவர் மோகன்பாபு, மெக்கானிக் அடைக்கலம் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். கைதான ஆறு பேரையும் விசாரணை செய்து வருகிறார் குற்றப்பிரிவு நுண்ணறிவு துறையினர்.
இதற்கிடையே, பிடிபட்ட அபின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும், அபின் கடத்துவதாகத் தொடர்ந்து வந்த புகாரை அடுத்து மறைமுகமாக நடந்த சோதனையில் இந்த கடத்தல் பிடிபட்டிருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிடிபட்ட ஆறு பேரில் ஒருவரான மெக்கானிக் அடைக்கலம் என்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. லுவாங்கோ அடைக்கல ராஜ் என்னும் பெயர் கொண்ட இந்த அடைக்கலம் பாஜகவின் பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவர் மற்றும் ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அடைக்கலம் பிஜேபி மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.