கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிடச் சங்கத் தலைவராக இருந்தவர் இப்போதைய திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி. இந்தக் காலகட்டத்தில் வணிக வளாகம் கட்டியதில் ரூ. 7.64 லட்சம் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய கூட்டுறவு சங்க பதிவாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிடச் சங்கத் தலைவராக தற்போதைய திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பதவி வகித்தார். அவர் பதவி வகித்த காலகட்டத்தில் வணிக வளாகம் கட்டியதில் ரூ. 7.64 லட்சம் முறைகேடு செய்ததாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக கடந்த 2004-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவுச் சங்க துணைப்பதிவாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிடச் சங்கத்தின் தற்போதைய தலைவர் வி.பரணிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், ஆர்.எஸ்.பாரதி முறைகேடு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிடக்கோரியும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக செங்கல்பட்டு கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் விசாரணையை 8 வாரகாலத்துக்குள் நடத்தி அதன் அறிக்கையை வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.