சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. அதே சமயம், கோயில்களைத் திறப்பது பற்றி அரசு இது வரை எந்த முடிவும் அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பின் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தாலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பஸ், ரயில் போக்குவரத்து தடை நீடிக்கிறது. ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்கள், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் 18ம் தேதி முதல் திறக்கப்படும். கடை வாசலில் சாமியானா பந்தல் அமைத்துத் தடுப்புகள் போடப்பட்டு வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். கடையின் கவுண்டர் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட மைக் செட் பொருத்த வேண்டும். ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும். டாஸ்மாக் மதுபானக் கடையில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். கடைகளுக்கு வெளியே 3 அடி இடைவெளிவிட்டு 50 வட்டங்கள் போட்டு அந்த வரிசையில்தான் வாடிக்கையாளர்கள் நிற்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உள்பட மாநகராட்சிப் பகுதிகளில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்திற்குக் குறைவான வருமானம் உடைய மிகச்சிறிய கோயில்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் சிறிய கோயில்களில் கூட தினமும் 100 ரூபாயாவது வருமானம் வரும். அப்படிப் பார்த்தால் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் வரும். அதனால், பெரும்பாலான கோயில்கள் மூடியே கிடக்கின்றன. மற்ற மாநிலங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்ற பெரிய கோயில்களே திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் சிறிய கோயில்களைத் திறக்காதது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளை மட்டும் ஏன் திறக்கிறார்கள்? கோயிலுக்கு வரும் பக்தர்களை விட குடிமகன்கள் எப்படி ஒழுக்கமாக இடைவெளி விட்டு நிற்பார்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி, தமிழக அரசின் மீது பக்தர்கள் கோபம் கொள்கிறார்கள். அரசு எப்போதுதான் கோயில்களைத் திறக்குமோ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கிடையே, சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்படப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.