ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் போட தமிழக அரசியல் களம் திடீர் பரபரப்புக்குள்ளானது. ஆனால் அவர் சொன்னதுபோல் சசிகலா விடுதலையாகவில்லை. விடுமுறை நாட்கள், நன்னடத்தை விதிகள், தண்டனைக்கு முன்பே ஏற்கெனவே சிறையிலிருந்த நாட்கள் இதையெல்லாம் கணக்கில் கொண்டால் கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலையாகி இருக்க வேண்டும்.
ஆனால் இது நாள் வரை அவர் விடுதலை ஆவதற்கான அறிகுறியே தெரியாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே இப்போது, டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நேற்று தனது யூடியூப் சேனலில், ஆகஸ்ட் 28-ம் தேதி சசிகலா நிச்சயம் விடுதலை ஆவார். சசிகலா விடுதலை தொடர்பாகக் கர்நாடக அரசிடமிருந்து ஆகஸ்ட் 16-ம் தேதி மதியம் இரண்டரை மணிக்கு இ-மெயில் தகவல் ஒன்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் போயிருக்கிறது" என்று புதுக்குண்டைப் போட்டுள்ளார்.
ஆனால் சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியனோ, ``சசிகலா விடுதலை குறித்து கர்நாடக சிறைத் துறை எங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிக்கப்படும். இதுவரை அப்படி விடுதலை தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகையை எல்லாம் தயாராக இருக்கிறது. அவரின் விடுதலைக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம்" எனக் கூறியுள்ளார்.
அதிமுக வட்டாரமோ, ``சசிகலாவின் விடுதலையைத் தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். கொரோனா இருக்கும் இப்படியான சூழலில் சிறையிலிருந்து வெளியில் வர சசிகலா விரும்பவில்லை. பெங்களூருவிலிருந்தே பிரம்மாண்ட வரவேற்புடன் வரவேண்டும் என்றும், அவரது வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டு வருகிறது. இது நடக்க இப்போதைய சூழ்நிலை சாதகமாக இருக்காது. கொரோனா முடிந்ததால் தான் அது சரியாக இருக்கும்" எனக் கூறியுள்ளனர்.