பெண் பத்திரிகையாளர்கள் மீது ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் சமூக ஊடக பதிவுகள் தொடர்வதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாகச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இது தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் " ஊடகவியலாளர்கள் சமூகத்தில் நிகழ்ந்து வரும் நிகழ்வுப் போக்குகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பார்வையை சமூக வலைத்தளங்களில் எழுதுவதும், கருத்து தெரிவிப்பதும் அவர்களது அடிப்படை உரிமை. இக்கருத்தில் மாறுபாடு உள்ளவர்கள் கருத்தைக் கருத்தால் எதிர்க்க வேண்டுமே தவிர மாறாகத் தனிப்பட்ட நபர்களை பாலியல் ரீதியாக வக்கிரமாக எழுதுவதும், இழிவுபடுத்தி பின்னூட்டம் ஈடுவதும் கடும் கண்டனத்துக்குரியது.
பெண் என்ற காரணத்தினாலேயே சமூக வலைத்தளங்களில் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களைப் பார்வைகளை ஆபாசமாகக் கொச்சைப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் இழிவுபடுத்தும் செயல்களில் ஒரு சில நபர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது ஏற்கத்தக்கதல்ல. இது குறித்து சம்பந்தப்பட்ட ஒரு சில ஊடகவியலாளர்கள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். மாதர் அமைப்புகள், ஊடகவியலாளர் சங்கங்கள் கூட புகார் கொடுத்துள்ளனர்.
பெண் ஊடகவியலாளர்கள் மட்டுமின்றி அரசியல் இயக்கங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், பெண் தலைவர்கள், ஆளுமைகள் ஆகியோரும் தொடர்ந்து இத்தகைய ஆபாச அருவருக்கத்தக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆட்சியாளர்களின் அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக காவல்துறை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. காவல்துறை நடவடிக்கைகள் அரசியல் சார்பு தன்மையோடு இல்லாமல் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைச் செயல்படுத்தும் வகையில் அமைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்." எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் "இதுவரை காவல் துறைக்கு வந்துள்ள பெண் ஊடகவியலாளர்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். புகார்களைப் பெறுவதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் எவ்வித பாரபட்சமும் வெளிப்படாதவாறு காவல் துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும். இணையதளத்தில் பெண்கள் மீதான வன்முறையை நிகழ்துவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." எனவும் அந்த புகார் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.