திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உம்ராபாத் பகுதியில் சாராய வியாபாரிகள் நடமாட்டம் அதிக அளவில் உண்டு. இங்குப் பெருமளவு கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்துவதும் உண்டு. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள மிட்டாளம் என்ற இடத்தைச் சேர்ந்த அஜித் என்பவர் பிரபல சாராய வியாபாரி ஆவார்.
ஆனால் பெரும்பாலும் இவர் மீது போலீசார் கை வைப்பதில்லை. போலீசுக்கு அவ்வப்போது இவர் நன்றாக 'கவனிப்பது" தான் அதற்குக் காரணமாகும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அஜித் தனது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடினார். தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை பிறந்தநாள் விழாவிற்கு அவர் அழைத்திருந்தார். இந்த விழாவுக்கு உம்ராபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான விஸ்வநாதனையும் அஜித் அழைத்திருந்தார். அஜித்தின் அன்பான அழைப்பைத் தட்ட முடியாததால் சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் அந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் கள்ளச்சாராய வியாபாரி அஜித்துக்கு சால்வை அணிவித்து அவருக்கு பிறந்தநாள் கேக்கையம் வாயில் ஊட்டினார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பரவியது. ஒரு சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டரே பெர்த் டே கேக் ஊட்டுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனை இன்று ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.