தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மேல மங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் துரைமுத்து (30). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்ளன. இது தவிர ஏராளமான வெட்டு, குத்து உள்படக் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. ஒரு கொலை வழக்கு தொடர்பாக இவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசார் மீது துரைமுத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். இந்த சம்பவத்தில் சுப்பிரமணியன் என்ற காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு குண்டு வெடித்ததில் ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார்.
இந்நிலையில் ரவுடி துரைமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் பலமணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலைப் பெற்றுக்கொண்டு சொந்த ஊரான மங்கலக்குறிச்சிக்கு கொண்டுசென்றனர். முதலில் உடலை தகனம் செய்யவே அவர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் திடீரென அந்த முடிவை மாற்றி வீட்டை ஒட்டி உள்ள தோட்டத்தில் துரைமுத்துவின் உடலை அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யும்போது அவரது உடலின் மேல் ஒரு வீச்சரிவாளையும் வைத்தனர். குண்டு வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த ரவுடி துரைமுத்துவின் உடல் வீச்சரிவாள் வைத்து அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது தென்மாவட்டங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.