ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் அப்பீல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால், அந்த தொழிற்சாலையை மூட வேண்டுமென்று கோரி பெரும் போராட்டங்கள் நடந்தன. கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கடந்த வாரம் வெளியிட்ட தீர்ப்பில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறி, வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. அதில் ஐகோர்ட் தவறான முடிவெடுத்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகே சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.