திருவாரூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் புதிய பணிகளை மாலையில் தொடங்கி வைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது மாவட்டந்தோறும் சென்று பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தும், பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். சென்னையிலிருந்து நேற்று புறப்பட்டு கடலூர் சென்ற அவர், நேற்று காலையில் அந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும் பேசினார். மேலும், அவர் பலருக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர், மாலையில் நாகப்பட்டினம் சென்று அந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு நடத்தினார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில், 207 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, 43 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 13 திட்டப் பணிகளைத் துவங்கி வைத்தார். விழாவில், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று அரசு விழாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். காலை 9.30 மணியளவில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வீட்டுமனைப்பட்டா, கோவிட்-19 சிறப்பு உதவி தொகுப்பின் கீழ் புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் மானிய உதவிகளை அவர் வழங்கினார். மொத்தம் 781 பேருக்கு 5 கோடியே 52 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், 22 கோடியே 66 லட்சம் ரூபாயாய் மதிப்பீட்டில் 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். மேலும் 11 கோடியே 50 லட்சம் மதிப்பில் 14 நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி வைத்தார்.இன்று மாலையில் அவர் தஞ்சாவூரில் ஆய்வுக் கூட்டம் நடத்தி விட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.