தமிழகத்தில் செப்.1 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள்.. முதலமைச்சர் அறிவிப்பு..

C.M. Edappadi palanisamy announce lockdown relaxations

by எஸ். எம். கணபதி, Aug 30, 2020, 21:36 PM IST

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தளர்வுகளையும் அவர் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அடுத்தடுத்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் திறக்கப்படவில்லை. பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்கு இ-பாஸ் பெறும் நடைமுறையில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்தன. அதற்கான கெடுபிடிகளை நீக்கினாலும், இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு விடாப்பிடியாக வைத்து கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கே எந்த அனுமதி சீட்டும் தேவையில்லை என அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டக் கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:


நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் இ-பாஸ் இல்லாமல், மக்கள் பயணம் செய்யலாம். ஆனால், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் கிடைக்கும்.


செப்டம்பர் 1ம் தேதி முதல், அனைத்து வழிபாட்டு தலங்களும் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவிக்க உள்ளது.

மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவையும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்கப்படும். மக்கள் அனைவரும் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பயணம் செய்யலாம். உணவகங்கள், தேநீர் கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.

உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள், நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் இயக்கப்படும். மாநிலத்திற்குள் ரயில் சேவை செப்டம்பர் 15ம் தேதி வரை இயங்காது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், நீச்சல்குளங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாதலங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டிருக்கும்.


அரசியல், கல்வி மற்றும் பொது விழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும்.

அதே சமயம், ஞாயிற்றுக் கிழமைகளில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு செப்.1ம் தேதிக்கு பிறகு இருக்காது.


இவ்வாறு முதல்வர் அறிவித்திருக்கிறார்.

You'r reading தமிழகத்தில் செப்.1 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள்.. முதலமைச்சர் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை