ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல்.. அதிமுக, திமுக நேரடி போட்டி?

by எஸ். எம். கணபதி, Sep 9, 2020, 09:47 AM IST

ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் பதவிக்காலம் கடந்த ஏப்ரலில் முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.


தற்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ம் தேதி தொடங்குகிறது. அதே நாளில் ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்.11ம் தேதி முடிகிறது. பொதுவாகவே லோக்சபா துணை சபாநாயகர், ராஜ்யசபா துணை சபாநாயகர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு விட்டு கொடுப்பது மரபாகும்.


இந்நிலையில், ஆளும் பாஜக சார்பில் கூட்டணிக் கட்சி ஒன்றுக்கு இந்த பதவியை விட்டுத் தர வாய்ப்பிருக்கிறது. அதன்படி, ராஜ்யசபாவில் 9 உறுப்பினர்களை கொண்டுள்ள அதிமுகவுக்கு இந்த வாய்ப்பு தரப்படலாம். காரணம், விரைவில் தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் சில இடங்களையாவது கைப்பற்ற வேண்டுமென்று பாஜக பகீரதப்பிரயத்தனம் செய்து வருகிறது. அதனால், அதிமுகவுக்கு வாய்ப்பு தரப்படலாம்.


அதே போல், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக திமுகவை சேர்ந்தவரை நிறுத்த முயற்சித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ராஜ்யசபா கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், லோக்சபா கட்சித் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி உள்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சீன ஊடுருவல், பொருளாதார சரிவு, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது.


மேலும், ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுக உள்பட எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கும் முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக, ராஜ்யசபாவில் 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுகவை சேர்ந்தவரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என காங்கிரஸ் விரும்புகிறது.


எனவே, ஆளும்கூட்டணி சார்பில் அதிமுகவையும், எதிர்க்கட்சிகள் சார்பில் திமுகவையும் களத்தில் மோத விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதிமுகவின் சார்பில் முன்னாள் துணை சபாநாயகரான தம்பிதுரையும், திமுக சார்பில் மூத்த உறுப்பினரான திருச்சி சிவாவும் நிறுத்தப்படலாம் என்றும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுக வேட்பாளர் என்றால் இடதுசாரிகள், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் ஆதரிக்கும் வாய்ப்பிருக்கிறது.READ MORE ABOUT :

More Tamilnadu News