சென்னையில் பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையான வழித்தடத்தில் இன்று(செப்.9) காலை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. நாளை முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கவுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து பஸ், ரயில்கள் ஓடத் தொடங்கின. சென்னையில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீல வழித் தடத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த 7-ம் தேதி முதல் இயங்கி வருகிறது.
இதைத்தொடர்ந்து, பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் பச்சை வழித்தடத்தில் ரயில் சேவைகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கின.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் உள்நாட்டு / வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நாளை(செப்.10) முதல் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.