இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை அனைத்து கட்சிகளும் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த தேர்தலில் தமிழக காங்கிரஸ் வழக்கம் போல திமுகவில் இணைந்து போட்டியிட உள்ளது. இந்நிலையில். சமீபத்தில், காங்கிரஸ் சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், அக்கட்சியின் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு வரும் தேர்தலில் அதிக இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள், அத்துடன் துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள் எனத் தகவல் வெளியானது. இது திமுக காங்கிரஸ் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், இதனை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. மேலும் துணை முதலமைச்சர் பொறுப்பு தொடர்பான எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை என அதே வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டு விளக்கம் தெரிவித்துள்ளார்.