தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு தொற்று.. கொரோனா பலி 8811 ஆனது..

corona new cases still increasing in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Sep 21, 2020, 09:32 AM IST

தமிழகத்தில் நேற்று புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 5.41 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.தமிழக அரசு நேற்று(செப்.20) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் ஒருவர் கேரளாவில் இருந்தும், ஒருவர் ராஜஸ்தானில் இருந்தும் வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 41,993 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5206 பேரையும் சேர்த்து, இது வரை 4 லட்சத்து 86,279 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். நோய்ப் பாதிப்பால் நேற்று 60 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8811 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று 996 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 156 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 55,639 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 289 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 207 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 32,580 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30,140 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. கோவையில் 568 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், திருப்பூரில் 194 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களிலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.தமிழகத்தில் நேற்று மட்டும் 84,338 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 62 லட்சத்து 74,656 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Tamilnadu News

அதிகம் படித்தவை