பல கோடி மோசடிகள்.. துர்நாற்றம் வீசும் மதுரை ஆவின் பால்.. முகவர்கள் கொதிப்பு..

Aavin milk agents association complains corruption in Madurai Aavin.

by எஸ். எம். கணபதி, Sep 21, 2020, 14:56 PM IST

மதுரையில் விநியோகிக்கப்படும் ஆவின் பால் ஒரு வாரமாகத் துர்நாற்றம் வீசுவதாகப் புகார் எழுந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மதுரை மாவட்டத்தில் பி.பி.குளம், விராட்டிப்பத்து, எல்லீஸ் நகர், மேல அனுப்பானடி, டி.ஆர்.ஓ காலனி, கூடல் புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விநியோகம் செய்யப்பட்டு வந்த சமன்படுத்தப்பட்ட, நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டிலேயே கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பால் கெட்டுப் போனது போன்று இருந்துள்ளதால் நுகர்வோர்கள் அதனைத் திருப்பி கொடுத்து வேறு பால் மாற்றித் தருமாறு கேட்பதால், பால் முகவர்களும், சில்லறை வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆவின் பால் விற்பனை மூலம் பால் முகவர்களுக்குச் சொற்ப அளவிலேயே வருமானம் கிடைக்கிறது. இதில் நுகர்வோர் தரப்பில் இருந்து தொடர்ந்து ஒருவாரமாகத் தொடர்ச்சியாக வந்த புகாரைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆவின் உயரதிகாரிகளை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும், ஆவின் அதிகாரிகள் வாட்ஸ் அப் மூலமும் அவர்களின் கவனத்திற்கு மேற்கண்ட பிரச்சனையை முகவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

புகாரைச் சரி செய்வதாக உறுதியளித்த அதிகாரிகள், எதுவுமே செய்ய முன் வராததால் இன்று வரை மதுரை மாவட்ட ஆவின் பாலில் துர்நாற்றம் வீசுகின்ற அதே நிலையே தற்போது வரை நீடிக்கிறது.ஏற்கனவே மதுரை மாவட்ட பால் திட்டப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 8 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சூழலில், மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்களில் பல கோடி ரூபாய் வரை மோசடிகள் அரங்கேறி வருகின்றன.அதில் இதுவரை ஒரேயொரு மொத்த பால் குளிர்விப்பான் நிலையத்தில் மட்டும் 62லட்சம் ரூபாய்க்கு மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடிகளாலும், முறைகேடுகளாலும் சிக்கிச் சீரழிந்து வரும் மதுரை மாவட்ட ஆவின் நிர்வாக சீர்கேட்டால் தற்போது தரமற்ற பாலினை விநியோகம் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
"தாய்ப்பாலுக்கு நிகரான பால் ஆவின் பால்" எனத் தமிழக அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் நிர்வாக சீர்கேடு காரணமாக, ஆவின் பாலே துர்நாற்றம் வீசுகின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு அதன் தரம் தனியார் பால் நிறுவனங்களுக்கு மத்தியில் சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆவின் பால் கொள்முதல் நிலையங்களிலும், அதன் கூட்டுறவுச் சங்கங்களிலும், ஆவின் நிறுவனத்தின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை நடைபெற்று வரும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ கோயில் கோயிலாக ஆறுகளுக்கும், குளங்களுக்கும் நகர்வலம் சென்று கொண்டிருக்கிறார்.ஊழல் அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக் கொண்டு அவர்களுக்குப் பதவி உயர்வு பெற்றுத் தருவதில் தனது பங்கைச் சிறப்பான முறையில் செய்து வருகிறார். ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார். செயல்படாத பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும், ஊழலுக்குத் துணை போகும் ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலாரையும் கண்டித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக முதல்வரோ, தான் ஒரு விவசாயி என சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதில் மட்டுமே நாட்களைக் கடத்தி வருகிறார். இனியாவது தமிழக முதல்வர் உடனடியாக விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு பொன்னுசாமி கூறியுள்ளார்.

You'r reading பல கோடி மோசடிகள்.. துர்நாற்றம் வீசும் மதுரை ஆவின் பால்.. முகவர்கள் கொதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை