கோவை, சேலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு..

by எஸ். எம். கணபதி, Sep 25, 2020, 09:38 AM IST

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நேற்று (செப்.24) இரவு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 63,691 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.எனினும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5692 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 8,210 பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது 60, 70 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
நோய்ப் பாதிப்பால் நேற்று 66 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 9076 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் 1089 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 196 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 59,683 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 299 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 265 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 33,626 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 31,065 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 642 பேருக்கும், சேலத்தில் 311 பேருக்கும், திருப்பூரில் 188 பேருக்கும், கடலூரில் 230 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் 88,784 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 66 லட்சத்து 8675 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Get your business listed on our directory >>More Tamilnadu News