திமுக தலைவர் ஸ்டாலினுடன் தினேஷ்குண்டுராவ் சந்திப்பு.. தேர்தல் உடன்பாடு பேச்சு..

Dinesh Gundurao meets Dmk president stalin.

by எஸ். எம். கணபதி, Sep 25, 2020, 15:30 PM IST

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று(செப்.25) சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது.அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் பல புதிய நிர்வாகிகளை நியமித்தார். அதில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராகக் கர்நாடக எம்.எல்.ஏ.வான தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நேற்று சென்னை வந்தார். காமராஜர் அரங்கத்தில் அவர், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினைத் தமிழக முதல்வர் ஆக்க வேண்டும் என்பதே ராகுல்காந்தியின் கனவு. அதை நிறைவேற்றும் வகையில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும், கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்றார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தினேஷ் குண்டு ராவ் இன்று காலையில் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமாகச் சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் தேர்தல் உடன்பாடு குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.சந்திப்பின் போது, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவற்றில் 8 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. இன்னொரு 10 தொகுதிகளைப் பிடித்திருந்தால், திமுக கூட்டணியே ஆட்சி அமைத்திருக்கும். அதனால் காங்கிரசுக்கு இத்தனை இடங்களைக் கொடுத்ததால்தான், திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது என்று திமுகவினர் புலம்பினர். அதனால் இந்த முறை காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் சீட் தர வேண்டுமென்று திமுகவின் மூத்த தலைவர்கள், ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அது மட்டுமல்ல, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிட்டால் அவற்றுக்குக் கூடுதல் இடங்களைத் தரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் இப்போதே திமுகவுடன் பேரம் பேசி அதே 41 தொகுதிகளை எப்படியாவது வாங்கி விட வேண்டுமென்று முயற்சி செய்து வருகிறது.

You'r reading திமுக தலைவர் ஸ்டாலினுடன் தினேஷ்குண்டுராவ் சந்திப்பு.. தேர்தல் உடன்பாடு பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை