ஏழைத்தாயின் மகனும், போலி விவசாயியும் சேர்ந்து செய்யும் கெடுதல்கள்.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..

Dmk will move court against Farm bills, Stalin said.

by எஸ். எம். கணபதி, Sep 28, 2020, 13:14 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, திமு.க. கூட்டணி சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு என்றால்; மாநில அரசு விவசாயிகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. இருவரும் சேர்ந்து வஞ்சிப்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தன்னை ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக் கொள்கிறார். இந்த ஏழைத்தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏழைத்தாயின் மகன்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தன்னை விவசாயி என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகளின் வாழ்க்கையே பறிபோய்க் கொண்டிருக்கிறது. ஏழைத் தாயின் மகனும், இந்த விவசாயியும் சேர்ந்து ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் செய்யவில்லை; தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை, கெடுதல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.
விவசாயத்தை முன்னேற்றப் போவதாக சொல்லி மூன்று சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களால் விவசாயிகள் பின்தங்கி விடுவார்கள். நிலத்தில் இருந்து துரத்தப்படுவார்கள். அதனால்தான் அந்தச் சட்டங்களை எதிர்க்கிறோம்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சி இந்த சட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக நிறைவேற்றி வைத்துள்ள விவசாயக் கட்டமைப்பு அழிந்து விடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அந்தக் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த கட்சி. அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத்கவுர் பாதல் ராஜினாமா செய்திருக்கிறார்.

மத்திய அரசு எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கின்றன என்று சிலர் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை. மக்களுக்கு விரோதமான சட்டம் எதுவாக இருந்தாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்போம். இந்த விவசாயச் சட்டங்களை நாம் மட்டுமா எதிர்க்கிறோம்; இந்தியாவே எதிர்க்கிறது, போராடுகிறது.


பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், டெல்லி எனப் பல்வேறு மாநிலங்களில் விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. நாடு முழுவதும் இந்தச் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் வேளாண் மசோதாவை எரித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தானில் விவசாயிகள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துகிறார்கள். கர்நாடகாவில் 34 விவசாய சங்கங்கள் சேர்ந்து போராடி வருகிறார்கள்.
அரியானாவில் விவசாயிகள் ரயில் மறியல் செய்து வருகிறார்கள். தண்டவாளத்தில் சமையல் செய்து சாப்பிட்டும், தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியும் போராட்டத்தை விவசாயிகள் நடத்துகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் 31 விவசாய அமைப்புகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். பேருந்துகள் இயங்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தி உள்ளார்கள். கேரளாவில் ஆளுநர் மாளிகை முன்பு மறியலும், ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவே இந்தச் சட்டத்துக்கு எதிராக கொந்தளித்து போராட்டத்தை நடத்தி வருகிறது. வேளாண் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவிருப்பதாக கேரள அரசு கூறியுள்ளது. இங்கு தமிழக மக்களின் சார்பாக எதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று சொல்கிறார். கூனிக்குறுகி மண்புழுபோல வளைந்து நெளிந்து பதவியைப் பெற்றவர். கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் இந்தச் சட்டங்களை ஆதரிக்கிறார். இந்த மூன்று சட்டங்களை ஆதரித்து லோக்சபாவில் - ராஜ்யசபாவில் வாக்களித்ததோடு மட்டுமின்றி; இந்தச் சட்டத்தை முழுவதுமாக ஆதரித்து அறிக்கையும் விடுத்துள்ளார். அமைச்சர் துரைக்கண்ணுவும் இந்தச் சட்டங்களை ஆதரித்துப் பேட்டி அளித்துள்ளார். வேளாண் அதிகாரியையும் மிரட்டி அச்சுறுத்தி இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பேட்டி அளிக்க வைத்துள்ளார்கள். தன்னை விவசாயி என்று சொல்லி ஏமாற்றுபவர், விஷவாயு' என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்.
ஸ்டாலினுக்கு விவசாயம் என்ன தெரியும் என்கிறார். நான் விவசாயி, விவசாயி என்று கூறித் திரியவில்லையே! விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படும்போது துணை நிற்பவன்தான் இந்த ஸ்டாலின்! எடப்பாடிதான் கிஸான் திட்டத்தில் உருவான போலி விவசாயியாக வலம் வருகிறார்.


எட்டு வழிச் சாலையை எதிர்க்கும் விவசாயிகளை அழைத்துப் பேசியிருக்கிறாரா எடப்பாடி? அவர்களைத் தடியடி நடத்தி, நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த இவர் விவசாயியா, விஷவாயுவா? குடிமராமத்து திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கிறீர்களே, நீங்கள்தான் விவசாயியா? தூர்வாரும் திட்டத்தில் ஊழல் செய்கிறீர்களே, நீங்கள் விவசாயியா? ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு எடப்பாடி என்ன செய்தார்? ஊர் ஊராக சுற்றி வரும் எடப்பாடி எங்காவது மக்களைச் சந்தித்தாரா? குறைகளைக் கேட்டாரா? விவசாயக் கடன்களை வட்டியை தள்ளுபடி செய்யமாட்டேன் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்தது யார்? இந்தப் போலி விவசாயியை மக்கள் நம்பமாட்டார்கள்.
கொரோனா காலத்திலும் கொள்ளை அடிக்கும் இந்த கொடியவர்களின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்டப் போராட்டத்தை அறிவிப்போம். நிச்சயம், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Tamilnadu News

அதிகம் படித்தவை