எஸ்பிபி மறைவுக்கு அஜீத் இரங்கல் தெரிவிக்காதது சர்ச்சை ஆனது.. கோலிவிட்டில் வெடிக்கும் அரசியல்..

by Chandru, Sep 28, 2020, 13:31 PM IST

தமிழ் சினிமா வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லை அதில் நிறைய அரசியல் இருக்கிறது. சாதாரண நடிகர்கள், நடிகைகள் பேச்சுக்கள் பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால் பெரிய ஹீரோக்கள் பேச்சு அவர்களின் சினிமா வசனம் மற்றும் சமூதாய அணுகு முறைகளை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் செய்பவர்களும் உன்னிப்பாகவே கவனிக்கின்றனர்.
சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக 74 வயது பாடகர் எஸ்பிபாலசுப் ரமணியம் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் மற்றும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என எல்லா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் நட்சத்திரங்களும் தங்களது இரங்கல் செய்தியை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் மெசேஜாகவும் பகிர்ந்தனர்.


நடிகர் விஜய் நேரடியாக சென்று எஸ்பிபி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்த விஷயத்தில் இதுவரை எந்த ஒரு அறிக்கையோ, இரங்கல் மெஸேஜோ நடிகர் அஜீத் குமார் வெளியிடாமல் மவுனமாக இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அஜீத்குமார் இரங்கல் செய்தி இருக்கா என்று மீடியாக்காரர்கள் மாறி மாறி வாட்ஸ் அப்பில் கேட்ட வண்ணமிருந்தனர். ஒருவர் கோபமாகி. இருந்தால் பகிர மாட்டாங்களா என்று கொத்தித்து விட்டார். ரசிகர்கள் மத்தியிலும் எஸ்பிபிக்காக ஒரு இரங்கல் அறிக்கை கூட அஜீத் விடவில்லையே என்று சலசலப்பு எழுந்தது. தற்போது இது கோலிவுட்டில் விவாத பொருளாகவே மாறி இருக்கிறது.


டிவி விவாதங்களில் தோன்றி பேசும் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தன்னுடைய வலைதளப்பக்கத்தில், விஜய்யை விட எஸ்பிபி யால் அதிக பலன் அடைந்தவர்கள் அவரது இறுதிச் சடங்கிற்கு செல்லாத நிலையில் விஜய் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். அவர் விஜய்யின் போட்டி நடிகர் அஜீத்தை மறைமுகமாக தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அஜீத் மீது அடுத்தடுத்து வரும் இந்த புகார்கள் குறித்து அவரது ரசிகர்கள் சமாளிப்பாக பதில் அளித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் கடைபிடிப்பதை கருத்தில் கொண்டுதான் அஜீத் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்ல வில்லை என்றும் மற்றவர்கள் போல் அறிக்கை வெளியிட்டு அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணாதவர் அஜீத் எனவும் தெரிவித்து வருவதுடன் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அஜீத்துக்கு நல்ல நண்பர், அவருக்கு தொலைபேசியில் அஜீத் ஆறுதல் தெரிவித்திருப்பார் எனவும் யூகமாக தெரிவித்துள்ளனர்.

Get your business listed on our directory >>More Cinema News