சென்னை, கோவை மண்டலங்களில் மட்டுமே கொரோனா பரவல் அதிகரிப்பு..

by எஸ். எம். கணபதி, Sep 30, 2020, 09:23 AM IST

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை நூறுக்குக் கீழ் சென்றுள்ளது.தமிழக அரசு நேற்று (செப்.29) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5546 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 91,943 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இதில் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5501 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 36,209 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 70 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 9453 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 287 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 1277 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 159 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 66,029 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 330 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 279 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 35,228 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 32,127 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. நேற்று, கோவை மாவட்டத்தில் 572 பேருக்கும், சேலத்தில் 343 பேருக்கும், ஈரோட்டில் 126 பேருக்கும், திருப்பூரில் 153 பேருக்கும், கடலூரில் 109 பேருக்கும், நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 140 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 146 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது.

அதே போல், தஞ்சாவூர் மாவட்டத்தில் 186 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 127 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 122 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.சென்னை மற்றும் கோவை மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில்தான் தற்போது கொரோனா பரவல் நீடிக்கிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானோருக்குத் தொற்று பாதித்துள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை