பாஜகவில் சேரும் குஷ்பு.. மாற்றம் தவிர்க்க முடியாது..

Actress Kushboo joins Bjp today Delhi.

by எஸ். எம். கணபதி, Oct 12, 2020, 11:06 AM IST

நடிகை குஷ்பு இன்று மதியம் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் சேருகிறார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். அதனால் அவருக்கு எதிராக பாஜகவினரும் கடுமையாகப் பதிவுகளைப் போட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்புவின் நிலையில் மாற்றம் தெரிந்தது. தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டார். அதன்பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட போது, அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து, பா.ஜ.க.வில் சேருவதற்கு குஷ்பு தயாராகி விட்டதாகத் தகவல்கள் பரவின. இதன்பின்னர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த போராட்டத்தில் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் பேட்டி அளிக்கும்போது, நான் காங்கிரசில் இருந்து விலகப் போவதாக சமூக வலைத்தளங்களில் பொய் தகவல் பரப்புகிறார்கள் என்று மறுத்திருந்தார்.இதற்குப் பின்னர், குஷ்புவுக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. அவரும் கடந்த வாரம் டெல்லி சென்று விட்டுத் திரும்பினார். அதைத் தொடர்ந்து குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக மீண்டும் தகவல்கள் உலா வந்தன. இம்முறை குஷ்பு மறுக்கவில்லை. மவுனமாக இருந்தார்.

இந்த சூழலில் குஷ்பு நேற்றிரவு 9.30 மணிக்கு மீண்டும் டெல்லிக்குச் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள், பாஜகவில் சேரப் போகிறீர்களா? என்று கேட்டர். அதற்கு அவர், “கருத்துச் சொல்ல விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவருடன் கணவர் சுந்தரும் சென்றார். குஷ்பு இன்று மதியம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சியில் சேர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் உயர் அதிகாரிகள் சிலரும் பா.ஜ.க.வில் சேரவிருப்பதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:பலர் என்னிடம் ஒரு மாற்றத்தைப் பார்க்கின்றனர். நமக்கு வயது ஏறும் போது வளர்ச்சியும், மாற்றமும் இருக்கும். கற்றவை-கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை-பிடிக்காதவை என்று எல்லாமே புதிய வடிவத்தைக் கொடுக்கும்.

கனவுகள் புதியவை. விருப்பத்திற்கும், காதலுக்கும் வித்தியாசம் இருப்பதைப் போல், சரியானவற்றுக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது.இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார். காவி சுரிதார் அணிந்த தனது போட்டோவையும் குஷ்பு வெளியிட்டிருக்கிறார். குஷ்பு அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியவர். திருமணத்திற்கு முன்பே பெண்கள் உறவு கொள்வதில் தவறில்லை, பலரும் அப்படித்தான்... என்ற ரீதியில் ஒரு கருத்தை அவர் சொல்லி, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தமிழ்ப் பெண்களை அவமரியாதை செய்கிறார் என்று நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை