கேரளாவில் சைக்கிள் கடையில் பணிபுரிந்து வரும் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபருக்குக் கேரள அரசு லாட்டரியில் முதல் பரிசாக ₹80 லட்சம் கிடைத்துள்ளது.நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதை எப்போது, எந்த ரூபத்தில், யார் வடிவில் வருவாள் என்று யாருக்கும் தெரியாது. இப்படித்தான் கும்பகோணத்தில் இருந்து பிழைப்பு தேடி கேரளா சென்ற ஒரு தொழிலாளிக்குக் கேரளா அரசு லாட்டரியில் ₹80 லட்சம் முதல் பரிசு கிடைத்துள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயதான சண்முகத்திற்கு ஊரில் சரியாக வேலை கிடையாது. இவருக்குக் கற்பகவல்லி என்ற மனைவியும், குணாநிதி என்ற மகனும் உள்ளனர். வேலை இல்லாததால் சண்முகம் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டார். இதையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு அங்கு ஏதும் வேலை இருக்கிறதா என்று கேட்டுள்ளார். கோதமங்கலம் என்ற இடத்தில் சைக்கிள் கடையில் வேலை இருப்பதாகவும், அங்கு வருமாறும் அவர் கூறினார்.
இதையடுத்து கடந்த வருடம் சண்முகம் கோதமங்கலத்திற்கு சென்று அந்த சைக்கிள் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். கிடைக்கும் சம்பளத்தில் அவ்வப்போது லாட்டரி டிக்கெட் வாங்குவது சண்முகத்திற்கு ஒரு பழக்கமாக இருந்தது. இப்படித் தான் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள அரசின் காருண்யா என்ற லாட்டரி டிக்கெட்டை இவர் எடுத்தார்.
இதில் முதல் பரிசான 80 லட்சம் சண்முகம் வாங்கிய KD 508706 என்ற டிக்கெட்டுக்கு கிடைத்தது. சாதாரண தொழிலாளியான சண்முகத்திற்கு 80 லட்சம் லாட்டரியில் பரிசு கிடைத்த போதிலும் அது அவருக்கு அளவுகடந்த சந்தோஷத்தை ஒன்றும் ஏற்படுத்தவில்லை.எப்போதும் போல ரொம்ப சாதாரணமாகவே இருக்கிறார். இந்த பரிசுத்தொகையை வைத்து ஊரில் ஒரு வீடு கட்ட வேண்டும், மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவரது ஆசைகளாக இருக்கிறது.
தற்போது லட்சாதிபதி ஆகி விட்டபோதிலும், சைக்கிள் கடை தொழிலை மறக்க மாட்டேன் என்று இவர் கூறுகிறார். சைக்கிள் கடையில் வேலை பார்த்ததால் தான் எனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தது. எனவே இந்த தொழிலை மறக்க மாட்டேன் என்று கூறும் சண்முகம், எப்போதும் 6ல் முடிவடையும் டிக்கெட்டை மட்டுமே வாங்குவார். அதுதான் அவருக்கு அதிர்ஷ்ட நம்பராம். இப்போதும் 6ல் முடிந்த டிக்கெட்டுக்குத் தான் சண்முகத்திற்கு முதல் பரிசு 80 லட்சம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது